ஆசிரியர் தகுதித் தேர்வு... பள்ளிக் கல்வித் துறை மெத்தனம்.. ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

Posted By:

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் செய்வதில் ஒப்புதல் அளிக்காமல் பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு... பள்ளிக் கல்வித் துறை மெத்தனம்.. ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று மாநில அரசுகள் உத்தரவிட்டு அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் தாள் 2 ல் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழை பட்டதாரிகள் சமர்ப்பித்தும், இது நாள் வரை உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவில்லை என்று பட்டதாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட துறைக்கும் மனு கொடுத்துள்ளனர்.

குறிப்பாக ஆகஸ்ட் 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தாங்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் சமர்ப்பித்து கடந்த ஓராண்டாகியும் பணி நியமனத்துக்கான ஒப்பதல் வழங்கவில்லை. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஓராண்டாக சமபளம் இல்லாமல் பணியாற்றி வரும் அவல நிலை தொடர்கிறது. இது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை பெற்ற பிறகுதான் பணியிடத்துக்கான ஒப்புதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சான்றிதழுக்கு உண்மைத் தன்மை வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று அரசு தெளிவு படுத்த வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டுவருகின்றனர். அதற்கும் அரசு தரப்பில்பதில் இல்லை.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக சென்று பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டபோது, ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு சான்றே போதுமானது, தேர்வுநடத்தி சான்று வழங்குதுடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது. உண்மைத் தன்மை சான்று வழங்குவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதுபோன்ற முரண்பட்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவித்து வருவதால் பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யும் போது தகுதித் தேர்வு சான்றிதழை ஏற்றுக் கொள்ளும் பள்ளிக் கல்வித்துறை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யும் போது ஏன் ஒப்புதல் அளிக்க மறுக்கிறது என்று பட்டதாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளிக் கல்வித்துறை பாரபட்சமாக நடந்து கொள்வது நியாமற்றது என்றும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து உடனடியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மனு கொடுத்துள்ளனர்.

English summary
Teachers have accused school education department of being lethargic in giving approval to the appointment of those who cleared TET.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia