முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு: மார்ச் 8ல் ஆசிரியர்கள் கண்டனப் பேரணி

Posted By:


சென்னை: முதல்வரை சந்திக்க சென்ற ‘ஜேக்டோ' அமைப்பினரை நீண்ட நேரம் காக்க வைத்ததால் ஆசிரியர்கள் கோபம் அடைந்தனர். சில ஆசிரியர்கள் முதல்வர் அறையின் முன் கூச்சலிட்டதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து மார்ச் 8ம் தேதி பேரணி நடத்த கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு: மார்ச் 8ல் ஆசிரியர்கள் கண்டனப் பேரணி

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27 ஆசிரியர் சங்கங்கள் தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த வாரம் சட்டமன்றம் கூட்டம் தொடங்கியபோது, ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் தங்கள் கோரிக்கை குறித்து கவர்னர் உரையில் ஏதாவது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அத்துடன் அறிவிப்புகளுக்கான சூசகமான விஷயங்களும் அவர் உரையில் இல்லை. அதனால் வெறுத்துப் போன ஆசிரியர்கள் மார்ச் 8ம் தேதி மாவட்ட வாரியாக கண்டனப் பேரணிகளை நடத்த முடிவு செய்தனர். இதன்படி, 27 ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) கூட்டாக அறிவிப்பு வெளியிட்டது. அதில் மார்ச் 8ம் தேதி தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்துவது என்று கூறியது.

இது தொடர்பாக கடந்த 9ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் மனுவையும் கொடுத்தனர். அதன்பேரில் 25ம் தேதி முதலமைச்சர், ஆசிரியர்கள் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அதனால் ஆசிரியர் சங்கத்தினர் பேரணி நடத்துவதை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு தயாரானார்கள். இதன்படி நேற்று காலை 10 மணி அளவில் ஜேக்டோ அமைப்பின் சார்பில் 15 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் தலைமைச் செயலகம் வந்தனர். அவர்களை அங்கிருந்த போலீசார் முதல்வர் அறை உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர். 10.30 மணிக்கு அங்கு சென்ற ஆசிரியர்கள் அனைவரும் மதியம் 1 மணி வரை காக்க வைக்கப்பட்டனர். இதனால் பொறுமை இழந்த சில ஆசிரியர்கள் கோபமடைந்தனர். அங்கிருந்த அலுவலர்களை பார்த்து உட்கார நாற்காலிகூட வழங்காமல் இப்படி மணிக்கணக்கில் காக்க வைக்கலாமா என்று குரல் கொடுத்தனர்.

அங்கிருந்த அலுவலர்கள், உங்களுக்கு முதல்வரை சந்திக்க அப்பாயிண்ட் மென்ட் இல்லை. அதனால் முதல்வரை சந்திக்க முடியாது என்று கூறி ஆசிரியர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் மேலும் கோபம் அடைந்த ஆசிரியர்கள் திட்டமிட்டபடி மார்ச் 8ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் பேரணி நடக்கும் என்று நேற்று மாலை அறிவித்தனர்.

English summary
The Joint action committee of teachers organisation - JACTO-has announced a statewide protest against Chief Minister.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia