சென்னை: தேர்வு அறையில் பிட் அடித்ததாக பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தேர்வுத்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு ஆசிரியர்கள் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இது வரை மொழித்தாள்கள், கணக்கு, வேதியியல், தொழில் கல்வி பாடத் தேர்வுகள், சிறப்பு மொழிப்பாடத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் நேற்று நடந்த வேதியியல் தேர்வில் மட்டும் தமிழகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிட் அடித்தபோது பறக்கும் படையிடம் சிக்கியுள்ளனர். 4000 பேர் கொண்ட பறக்கும் படை அமைத்தும் மாணவர்கள் பிட் அடிப்பது தொடர்கிறது. இதையடுத்து, மாணவர்களை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் பிட் அடிப்பது தொடர்கிறது.
பொறியியல், மருத்துவம் படிப்புக்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும் போது அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் தேர்வு மையங்களை சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர். அதனால், பிட் அடிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியை தேர்வுத்துறை செய்து வருகிறது. அதற்காக அதிரடி உத்தரவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு அறையில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆசிரியர் மாணவர்கள் பிட் அடிக்க அனுமதிக்க கூடாது. பறக்கும் படையினர் வந்து சோதனையிட்டு மாணவர்கள் பிடிபட்டால் அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று அந்து உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் 26ம் தேதி நடக்க உள்ள விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












