பள்ளியில் மாணவர்களின் கண் பார்வை திறனைப் பாதிக்கும் வகையில், கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு, தற்போது கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாகப் பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால் குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை சார்ந்த சிரமங்களைக் குறைக்கும்.
கரும்பலகையின் ஓரங்களில் எழுத்து அளவு குறியீட்டினை அமைத்துக்கொண்டு எழுதுவதின் மூலம் ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்.
மேலும், கண் சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு உள்ள குழந்தைகளை வகுப்பில் முதல் வரிசையில் அமர வைப்பது அவசியம். வகுப்பறையில் எப்போதும் ஒரே சீரான வெளிச்சம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். கரும்பலகையானது ஒளியைப் பிரதிபலிப்பதாகவும், பார்க்க சிரம மூட்டுவதாகவும் இருக்கக் கூடாது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












