கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரியில் பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வின்றி பள்ளி அளவில் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள்
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் இறுதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
தேர்வின்றி தேர்ச்சி
தொடர்ந்து, கொரோனா தாக்கம் சற்று குறைந்த நிலையில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் உள்ள காரணத்தால் அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பள்ளி அளவில் தேர்வுகளை நடடத்த முடிவு
10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டால் எதன் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு அல்லது தொழிற்கல்வியில் சேர்ப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், பள்ளி அளவில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
பள்ளிக் கல்வித் துறையின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதுகுறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர். அதில், அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்
மாநில அளவிலான பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications












