பொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவு ஆன்-லைன் கலந்தாய்வு இறுதிச் சுற்றில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டும் 90 ஆயிரம் பி.இ. படிப்பிற்கான சேர்க்கை காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கான பி.இ. கலந்தாய்வு முடிந்த பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 479 பொறியியல் கல்லூரிகளில் 1,67,652 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன.
இதில், நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இந்த கலந்தாய்வில் மூன்று சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 46,213 இடங்கள் நிரம்பிவிட்டன. மேலும், 1,21,439 இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன.
இதனைத் தொடர்ந்து, 4-ஆம் சுற்று மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. அதில், முன்வைப்புத் தொகையைச் செலுத்திய 36,000 பேரில், 33,567 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்தனர். தற்போது, இவர்களில், 32,248 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீட்டை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அளித்துள்ளது.
இதை சனிக்கிழமைக்குள் (இன்று) மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு முடிவு செய்பவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு மற்றும் கல்லூரி சேர்க்கைக் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும்.
நான்காம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்றுள்ள 32 ஆயிரம் பேரில், அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கை பெற வாய்ப்புள்ளது. எனவே, கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்படுவது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












