பிஏ, பிஎஸ்ஸியில் சேர மாணவர் விருப்பம்: கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மீண்டும் மவுசு!

Posted By:

சென்னை: கலை மற்றும் அறிவியல் வகுப்புகளில் சேரவே இப்போது மாணவர்கள் அதிகம் விரும்புவதால், மீண்டும் இந்த கல்லூரிகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் தொடங்கி உள்ளது.

ஒவ்வொரு கல்லூரி முன்பும் மாணவர்கள் இப்போதே விண்ணப்பங்களுக்காகக் காத்திருக்கின்றனர். குறிப்பாக மாணவியர் இந்த கல்லூரிகளில் சேர்வதே சிறந்தது என முடிவெடுத்து விண்ணப்பங்கள் வாங்குகிறார்கள்.

குறைந்தது எஞ்ஜினீயரிங் மோகம்

முன்பெல்லாம் மாணவ மாணவிகள் எஞ்ஜினீயரிங் கல்லூரிகளில் அல்லது ஏதாவது ஒரு தொழில்கல்வி கல்லூரியில் சேரவே அதிக ஆர்வம் காட்டினர். இதைக் கண்ட பெரிய செல்வந்தர்கள், ஏராளமான சுயநிதி கல்லூரிகளை ஆரம்பித்து, பெரும் வசூல் பார்த்தனர்.

வாய்ப்பு குறைந்தது

ஆனால் படித்து முடித்த பிறகு வெளியில் வரும் புதிய பொறியாளர்களுக்கு எதிர்ப்பார்த்த வேலை கிடைக்கும் நிலை இல்லை. ஐந்தாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் பணியாற்ற வேண்டிய சூழல்.

 

 

கலை அறிவியல்

அதே நேரம் கலை, அறிவியல் வகுப்புகளில் பயின்று பட்டம் முடித்து வெளியில் வரும் மாணவ மாணவியர், அதைவிட அதிகமான சம்பளத்துக்கு பல்வேறு துறைகளில் பணியாற்றுவதைப் பார்க்க முடிகிறது. அதிகம் செலவழித்து படித்தும், நல்ல வேலை கிடைக்காத சூழலில், பெரும்பாலான மாணவர்களும் பெற்றோரும் இப்போது கலை அறிவியல் வகுப்புகளே போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல்

கடந்த ஆண்டே, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை - அறிவியல் கல்லூரிகளில் இடம்பெற மாணவர்கள் முட்டி மோதினர். சென்னையில் உள்ள கல்லூரிகளில் சேர பலமான சிபாரிசுகள் எல்லாம் தேவைப்பட்டன. அதே நேரம் எஞ்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சம் வரை இடங்கள் காலியாக இருந்தன.

பிளஸ்-2 தேர்வு முடிவு

தமிழகம் முழுவதும் 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ள பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியாகிறது. தேர்வு முடிவுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள் கல்வி வாழ்க்கையின் அடுத்தக்கட்ட பயணத்தில் அடி எடுத்து வைக்க உள்ளனர்.

இந்தநிலையில் பிளஸ்-2 வகுப்பில் 3-வது குரூப் படித்த மாணவ-மாணவிகள் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொடங்கி உள்ளது.

 

 

மாணவ-மாணவிகள் ஆர்வம்

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று விண்ணப்ப படிவத்தை வாங்கு வதற்காக காலை முதலே மாணவிகள் குவிந்தனர். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் நேற்று தொடங்கியது. விண்ணப்ப படிவத்தை வாங்குவதற்காக அதிகாலையிலேயே மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கல்லூரியில் குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல மாணவிகள் கூட்டம் அதிகமானதால் சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் அங்கு விண்ணப்ப படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரி, மாநில கல்லூரி ஆகியவற்றிலும் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கான மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.

விண்ணப்பம் வாங்கிய குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது? என்ற அச்சத்தில் ஒரு சில மாணவ-மாணவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் விண்ணப்ப படிவத்தை வாங்கி சென்றனர்.

 

லயோலாவில் 7-ம் தேதிதான்

விண்ணப்ப படிவம் வாங்க வர முடியாத மாணவர்களுக்கு பதிலாக அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் வாங்கி சென்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் 7-ந்தேதி நடைபெறும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்டெல்லா மாரிஸ் மகளிர் கல்லூரியில் ‘ஆன்-லைன்' மூலம் விண்ணப்ப படிவங்கள் விற்பனை நடக்கிறது.

 

 

பி.காம். படிப்பு முக்கியத்துவம்

கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் பி.காம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஏ இலக்கியம் போன்ற பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதாக கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்ப படிவங்கள் விநியோகமும் நேற்று தொடங்கியது.

 

அரசு கல்லூரிகளில்

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 2 ரூபாய் பதிவு கட்டணத்துடன் சேர்த்து ஒரு விண்ணப்ப படிவம் 27 ரூபாய்க்கும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 2 ரூபாய்க்கும் (பதிவு கட்டணம் மட்டும்) விற்பனை செய்யப்படுகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் விண்ணப்ப படிவங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்ந்து ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை விண்ணப்ப படிவங்கள் விநியோகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

English summary
It seems that most of the students in Tamil Nadu are interested in joining in Arts and Science colleges

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia