தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 3-ஆம் தேதியன்று திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் மற்றும் மக்களவைத் தேர்தல் காரணமாகக் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு 50 நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் 3-ஆம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும். அன்றே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்குக் குடிநீர், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சீருடைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












