முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் மட்டும் 11,650 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் எம்டிஎஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மார்ச் 11-ஆம் தேதி முதல் துவங்கி 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆவணங்களுடன் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஆன்லைன் மூலமாக மட்டும் 11,650 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருந்தன. தற்போது, மாநிலத்திற்கு கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் 124 இடங்களை அதிகரிக்கவும் மருத்துவ கவுன்சில் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது.
இந்த விண்ணப்பத்தினை பரிசீலனை செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரியம், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் 2019- 20 கல்வியாண்டில் மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












