தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் கடுமையான ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வி, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மடியாத சூழல் தொடர்ந்து வரும் சூழ்நிலையில் கல்வி கற்பிப்பதிலும், தேர்வுகளை நடத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில், பள்ளிகளைத் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவார் என அறிவிக்கப்பட்டது.
பள்ளிகளைத் திறக்க வேண்டியதன் அவசியம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, அன்றாடம் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றைக் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பள்ளிகளைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரே நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவத் தேவைகள் குறித்தும் இன்று முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
நவீனமயமாகும் அரசுப் பள்ளிகள்
இந்த நிலையில், தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீனமயமாக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்கள் மத்தியில் இதனைக் கூறியுள்ளார்.
செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது கட்டாயம்
மேலும் அவர் கூறுகையில், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். வரும் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 12ஆம் வகுப்பு பயிலும் 1330 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். தொடர்ந்து அத்தொகுதியில் 6 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்குப் புத்தக பை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.


Click it and Unblock the Notifications












