தமிழக பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வரும் ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-2019-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பாடத்திட்டம் மற்றும் உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இது குறித்து பாடத்திட்டக் குழு தரப்பில் கூறுகையில், ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில் 2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2019-20-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட அரசாணையில் அனைத்து வகுப்புகளுக்கும் வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாடத்திட்டப் பணிகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
இதனையடுத்து, பாடநூல்கள் அச்சிடும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. இப்பணி முடிவடைந்ததும் திட்டமிட்டபடி வரும் கல்வியாண்டில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.