ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பாடம், கல்லூரிகளில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களுடன் புதிய தேசியக் கல்விக் கொள்கையினை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழகத்தில் இதனை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார், உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, கலை, அறிவியல் படிப்புகளுக்குத் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, கல்லூரிகளுக்கான தன்னாட்சி அதிகாரம் உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எப்போதும் அமல்படுத்தப்படாது. தமிழகத்தில், இருமொழிக் கொள்கையைத் தான் பின்பற்றுவோம்.
மொழித் திணிப்பைத் தமிழகம் எப்போதும் அனுமதிக்காது. தமிழுக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












