சென்னை: என்ஜினீயரிங் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை வழங்கும் பயிற்சியை அளிக்க பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.
இதற்காக ஆங்கிலம் பயிலும் வகுப்புகளையும், ஆங்கிலத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகுப்புகளை மாணவர்களுக்காக என்ஜினீயரிங் கல்லூரிகள் நடத்தவுள்ளன.
பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலைக்காக செல்லும் மாணவ, மாணவிகள் ஆங்கிலம் பேச முடியாமல் அவதிப்படும் நிலை இன்றும் இருக்கிறது. இதைத் தவிர்க்கவே மாணவர்களுக்கு இந்த வகுப்புகளை அறிமுகப்படுத்தப் போவதாக என்ஜினீயரிங் கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரித் தலைவர் கலா விஜயகுமார் கூறியதாவது: கிராமப்புற பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரியாகப் புரிவதில்லை. மேலும் ஆங்கிலம் பேச அவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்காகவே இந்த வகுப்புகளைத் தொடங்கப்போகிறோம். கல்லூரிக்குள் நுழையும்போது அவர்களால் ஒரு சிறு வாக்கியத்தைக் கூட ஆங்கிலத்தில் அமைக்க முடிவதில்லை.
முதலில் அவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு வைத்து அதன் மூலம் அவர்களது ஆங்கிலப் புலமையைக் கண்டறிவோம். அதன் பிறகு அவர்களது நிலைக்கேற்ப ஆங்கிலப் பயிற்சியை அளிக்கவுள்ளோம். இதற்காக பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
எஸ்விசிஇ பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் முருகவேல் கூறியதாவது:
நகர்ப்புற பகுதிகளை விட கிராமப்புற பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் ஆங்கிலம் பேச சிரமப்படுகின்றனர் என்பது கண்கூடு. கல்லூரிகள் நடத்தும் தேர்விலிருந்தே இதை தெரிந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில் நடந்த ஆய்விலும் இதை அறிந்துள்ளோம். அனைத்துக் கல்லூரிகளிலும் மொழி ஆய்வகம் உள்ளது. அதை மாணவர்கள் பயன்படுத்தவேண்டும்.
மேலும் வகுப்பறைகளில் ஆங்கிலம் எந்த அளவுக்கு கற்றுத் தரப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












