இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் துவங்கப்படும் என கடந்த சில மாதங்களாகத் தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு வந்தது. அதன்படி, தற்போது சென்னை எழும்பூரில் செயல்படும் மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாணவ, மாணவியருக்கு தலா 4 சீருடை, பாடப் புத்தகம், புத்தகப்பை மற்றும் ஒரு ஜோடி காலணிகளையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
ஜூன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், முன்கூட்டியே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது இந்த மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தரமான கல்வி அளிப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 381 மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, எல்கேஜி, யுகேஜியில் சேர 52 ஆயிரத்து 993 குழந்தைகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே அங்குப் பணியமர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












