பிளஸ் 2 தேர்வில் தவறிய மாணவர்களுக்கு முக்கிய செய்தியை தமிழக தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தவறிய மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதற்கு மாணவர்கள் மே 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தேர்வில் தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளை உடனடியாக நடத்த தேர்வுத்துரை முடிவு செய்துள்ளது.
அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து பள்ளி மாணவர்கள் வரும் மே 16 முதல் ஜூன் 1-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று இந்தத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தத் தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 3, 4-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
இதுதவிர துணைத் தேர்வுக் கட்டணம், தேர்வு தேதிகள் நடைபெறும் விரிவான தேர்வுக்கால அட்டவணை, மாநிலம் முழுவதும் அமைந்துள்ள கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைக் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதேபோல் பிளஸ் 1 துணைத் தேர்வுகள் ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் வரு் 16-ம் தேதி முதல் துணைத் தேர்வுக்காக விண்ணப்பிக்கக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












