தமிழகத்தில் 5 மாவட்ட தலைநகரங்களில் வருடந்தோறும் 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜேட்-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பட்ஜெட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலங்களில் நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திறன் மேம்பாட்டில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தவும், இணையவழி சுய மதிப்பீடு செய்து கொள்ளவும், வேலை வழங்கும் நிறுவனங்களையும், வேலை தேடுபவர்களையும் இணைக்கும் விதமாக மாநில அளவில் முதன்மையானதொரு தளமாக காணொலிக்காட்சி வசதிகளுடன் கூடிய மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மேலாண்மை போன்ற நவீன உயர்நிலை தொழிற்பிரிவுகளுக்கான பயிற்சி ஆகியவை 20 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ரூ.38 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிறப்பான முன் முயற்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டத் தலைமையிடங்களில் வேலை வாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சியை அளிப்பதற்கான பயிற்சி மையங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முயற்சியில் ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் பிரிவுகளில் உள்ள சிறப்புத் தகுதித் திறன் தேவைப்படும் பணியிடங்களில் வருடந்தோறும் 10 ஆயிரம் வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.