தமிழ் வழியிலான பி.இ. இடங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் வரும் கல்வியாண்டில் தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தாய் மொழியிலேயே பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தமிழ் பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும், 17 உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் இந்த தமிழ் வழி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தொடக்க காலத்தில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவந்த நிலையில் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ் வழி படிப்புகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்தது.
இதனிடையே, இத்திட்டத்தை ஊக்குவிக்கவும், தமிழ் வழி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 20ம் தேதியன்று நடைபெற்ற 18-ஆவது தமிழ் இணைய மாநாடு தொடக்க விழாவில் கலந்துகொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் வழி பி.இ. படிப்புகளில் சேர மாணவர்கள் போதிய அளவில் ஆர்வம் காட்டாத காரணத்தால், வரும் கல்வியாண்டு முதல் இரு தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கும் ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் குறைக்கப்படும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












