பட்டு பாட்டி போன சம்மர் கிளாஸ்!

Posted By:

சென்னை : என்னடி இது பக்கத்து பிளாட்ல இருந்து ஒரே சத்தமாக கேட்குது. என்னனு போய் பார்த்துட்டு வா. சரிங்க அங்க ஏதோ சம்மர் கிளாஸ் நடக்குதுனு சொன்னாங்க. மனுஷங்க அங்கம் பக்கத்தில இருக்க வேண்டாமா ஒரே சத்தமா இருக்கு.

பட்டு பாட்டி சரி போய் பார்த்துட்டு வரேனு கிளம்பி பக்கத்து பிளாட்டுக்குப் போனாங்க. போன உடனேயே அங்கிருந்த 2 சம்மர் கிளாஸ் டீச்சர்ஸ் வாங்க பாட்டினு அன்பாக வரவேற்றார்கள். பிள்ளைகளா பாட்டிக்கு வணக்கம் சொல்லுங்கனு சொன்ன உடனேயே அத்தனை குழந்தைகளும் வணக்கம் சொன்னாங்க.

6 வயது முதல் 12 வயது வரை உள்ள குட்டி குழந்தைகளுக்கு சம்மர் வகுப்புக்கள் நடந்துக் கொண்டிருந்தது. பட்டு பாட்டியும் சோபாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அழகாக பாடல் பாடியும் ஆடியும் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் பட்டு பாட்டி.

சிரிப்பு கதைகள்

கொஞ்ச நேரம் ஆனதும் கிளாஸ் நடத்தும் பெண்மணிகள் பாட்டிக் கிட்ட கதை கேட்போமா என குழந்தைகளை தூண்டிவிட ஆரம்பித்தனர். குழந்தைகளும் பாட்டி கதை சொல்லுங்கனு சினுங்க ஆரம்பித்த உடன் பட்டுப் பாட்டியால் அதை தட்ட முடியவில்லை.

சிரிப்புக் கதைகள் மற்றும் புராணக் கதைகளைப் பற்றிக் குழந்தைகளுக்கு விளக்கமாகக் கூறினார். குழந்தைகள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளானார்கள். அதைப் பார்த்த பட்டு பாட்டிக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

பாட்டிக்கு சுண்டல்

பாட்டி நான் கிளம்புகிறேன் என கூறிவிட்டு விடை பெறும் நேரத்தில் பெண்மணிகள் எல்லோரும் பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்குங்கனு சொன்ன உடனே குட்டீஸ் எல்லாம் வந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். பின்பு பாட்டிக்கு சுண்டல் வெற்றிலைப் பாக்கு எல்லாம் கொடுக்கப்பட்டது. பாட்டி விடைபெற்று வீட்டிற்குச் சென்றார். மறுநாள் காலையில் மறுபடியும் சத்தம் தாத்தா ஏன்டி நேற்று போய்ட்டு சொன்னயா இல்லையா? இன்னைக்கும் ஒரே சத்தமா இருக்கு. சொன்னேன். மறுபடியும் இன்னைக்கு போயும் சொல்லிட்டு வரேன் பாட்டி மறுபடியும் கிளம்பிட்டாங்க.

அட்வைஸ்

பாட்டி போனதும் குழந்தைகளுக்கு ஒரே சந்தோசம் பாட்டியை ரொம்ப உற்சாகமாக குழந்தைகளும் வகுப்பு நடத்தும் பெண்மணிகளும் வரவேற்றனர். பாட்டி நேற்றைய தினத்தைப் போல இன்றும் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லி சந்தோசப்படுத்தினார். யார் வீட்டில எல்லாம் பாட்டி தாத்தா இருக்காங்கனு பாட்டி கேட்டதும் ஏழு, எட்டு பசங்க கையை தூக்கினாங்க. பெரியவங்க கிட்ட எப்படி நடந்துக்கனும் அவங்க வார்த்தைகளை தட்டாம கேட்கனும்னு என்றெல்லாம் பாட்டி குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தார்.

எனக்கு பாட்டியாக இருப்பீங்களா

நேரம் போனதே தெரியவில்லை. பாட்டி நான் வந்து ஒன்றரை மணி நேராமாகி விட்டது என சொல்லிக்கிட்டே கிளம்ப ஆரம்பிக்கவும் பெண்மணிகள் வந்து பாட்டிக்கு வெற்றிலை பாக்கு கொழுக்கட்டை எல்லாம் கொடுத்தனர் வாங்கிக் கொண்டு குழந்தைகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு பாட்டி வாசல் படிக்கு வந்ததும் அங்கிருந்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஓடி வந்து பாட்டி எங்க வீட்ல தாத்தா மட்டும் தான் இருக்காங்க. அப்படினு சொன்னது. உடனே பாட்டி தாத்தாக்கிட்ட நல்ல படி நடந்துக்கனும் அவங்க சொல்றத கேட்கனும் சொன்னாங்க. உடனே அந்தக் குழந்தை நீங்க எனக்கு பாட்டியா இருப்பீங்களானு கேட்ட உடனே பட்டு பாட்டிக்கு படபடவென கண்ணீர் வந்துவிட்டது. நான் உனக்கு கட்டாயம் பாட்டியாக இருப்பேனு சொல்லிட்டு பக்கத்து பிளாட்லதான் எங்க வீடு இருக்கு எப்ப வேணும்னாலும் நீ வரலாம் என சொல்லிவிட்டு சென்றார்.

சொந்த மகன்

வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும் போதே பாட்டியின் எண்ண ஓட்டத்தில் அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் நினைவுக்கு வந்தான். படிப்பை முடித்து அமெரிக்காவுக்கு போனவன் அங்கேயே ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஒரு பேத்தியும் பேரனும் இருக்காங்க. 15 நாட்களுக்கு ஒரு முறை போன் பண்ணி அம்மா நல்லா இருக்கீங்களா பணம் ஏதும் வேணுமா பிரச்சனை ஒன்னும் இல்லலா எனக் கேட்டு விட்டு வைத்து விடுவான். வருடத்திற்கு ஒரு முறை நான்கு நாட்கள் பேத்தி பேரன் மருமகள் மகன் அனைவரும் வந்து தங்குவார்கள். ஆனால் பேத்தி பேரனிடம் அவ்வளவாக ஒட்டுஇல்லை ஏனென்றால் மொழிப் பிரச்சனை தான் அவர்களுக்கு தமிழே தெரியாது.

ஆதங்கம் அடங்கியது

பென்சன் வருவதால் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் பணப்பிரச்சனை எதுவும் கிடையாது. ஆனால் பாசப்பிரச்சனைதான் பேரன் பேத்திகளிடம் சகஜமாக பேச முடியவில்லை என்ற ஆதங்கம் பாட்டிக்கு அதிகமாகவே உண்டு. ஆனால் சம்மர் கிளாசில் பார்த்த குழந்தைகளால் பாட்டியின் ஆதங்கம் அடங்கியது மனம் மகிழ்ந்தது.

பாட்டி சம்மர் கிளாஸ்

மறு நாள் காலையில் பட்டு தாத்தா ஏன்டி இன்னும் சத்தம் ஓயவே இல்லை டெய்லி போய் நீ என்ன சொல்லிட்டு வர்றனு தாத்தா கேட்டதற்கு. இன்னும் பத்து நாள்தான் பொறுத்துக்கோங்கனு சொல்லிட்டு கூடையில கொஞ்சம் பழம் பிஸ்கட் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க. எங்கனு கேட்கிறீங்களா சம்மர் கிளாசுக்குத்தான்!

English summary
summer class began. pattu grand mother told great experience gather from summer class. pattu grandmother and kittu grandfather life story in the article.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia