தொல்லியல் துறை பட்டயப் படிப்பிற்கான தகுதி அளவுகோலில் தமிழ் மொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய அரசிற்கு உட்பட்ட பண்டிட் தீன்தயாள் மத்திய தொல்லியல் கல்லூரியில் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான தகுதி அளவுகோல் உள்ளிட்ட அறிவிப்பு கடந்த அக்டோபர் 3ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் கல்வித் தகுதி பகுதியில் பாலி, சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பாரசீகம், அரபி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் இடம்பெற்றிருந்த நிலையில் தமிழ் மொழி இடம்பெறாமல் இருந்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பழம்பெருமை வாய்ந்த செம்மொழித் தமிழை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாகவும், தமிழ் மொழியில் படித்தோருக்கு தொல்லியல் துறையில் வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழியை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகச் சர்ச்சைகள் எழுந்தன.
மேலும், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது. தொடர்ந்து, மத்திய தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடிதம் எழுதினர்.
தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இந்த ஒருமித்த குரலைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதியளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.