நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா காலத்தில் பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிரே முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறியதைக் காணலாம் வாங்க.

மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தொடர்ந்து தற்போது வரையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பிற்காகப் பெற்றோர்கள், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
இதனிடையே, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாத வகையில், ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட் போன் வசதிகள் இல்லாத மாணவர்களும் கல்வி கற்றும் வகையில் கல்வித் தொலைக் காட்சி வாயிலாகப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்
இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டிருந்தது.

அக்டோபர் முதல் பள்ளிகள் திறப்பு
அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த சூழ்நிலையில், மாணவர்களைப் பள்ளிக்கு வர சொல்வது சரியான முடிவு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால் அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்ற தமிழக அரசின் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பள்ளிகள் திறப்பு எப்போது
மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்படும். அதன் பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!
அதுமட்டுமின்றி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுக் கூட்டத்திற்குப் பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் சமீபத்தில் அறிவித்தார்.

மத்திய அரசின் நெரிமுறைகள்
முன்னதாக, கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற அக்டேடாபர் 15-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் பள்ளிகள் திறப்பு, தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்களின் உயிரே முக்கியம்
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார். பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிரே முக்கியமானது. 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் மீண்டும் திறக்க தயார்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.