பி.எட். சேர்க்கை எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு

Posted By:

சென்னை: நடப்புக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

ஆனால் உடனடியாக பி.எட். சேர்க்கை தொடங்காது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பி.எட். சேர்க்கை எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு

பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், கலந்தாய்வு மேலும் தள்ளிப்போகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

பி.எட். மாணவர் சேர்க்கை ஜூலை மாதம் தொடங்கப்பட்டு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அறிவுறுத்தியுள்ளபோதும், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், என்.சி.டி.இ.-யின் புதிய வழிகாட்டுதலின்படி (2014 வழிகாட்டுதல்) பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த கால அவகாசமும் கோரப்பட்டது.

ஆனால், என்.சி.டி.இ. இதற்கு மறுத்துவிட்டது. அதே நேரம் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் புதிய வழிகாட்டுதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், பி.எட். இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. மேலும் ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் 2015-16 கல்வியாண்டுக்கான பி.எட். கலந்தாய்வு நடத்த திட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து நடத்த தயாராக உள்ளது.

இந்த நிலையில், சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதன் காரணமாக பி.எட். சேர்க்கை மேலும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நவம்பரில்தான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் உடனடியாக வகுப்புகள் தொடங்கப்படும் வாய்ப்புகள் இல்லை. மேலும் நவம்பர் 2க்குப் பிறகும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படலாம் என்பதால் மாணவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

English summary
Students who have applied for B.ed. courses are expecting to start courses soon. But the case is pending in Chennai High court regarding Course duration.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia