நமக்கு இந்த காலேஜ் சரிப்பட்டு வராது... மாணவர்களால் ஓரம் கட்டப்பட்ட 50 கல்லூரிகள்!

Posted By:

சென்னை: பொதுவாக என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கியதும் முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் உடனடியாக நிரம்பிவிடும். அந்த கல்லூரியில் இடம்பெற மாணவ, மாணவிகள் முண்டியடிப்பர்.

அதேபோல தரவரிசையில் பின்தங்கியுள்ள கல்லூரிகளை மாணவ, மாணவிகள் கண்டுகொள்வதில்லை. என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கி 10 நாட்களைக் கடந்தும் 50-க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஓர் இடத்தை மாணவர்கள் தேர்வு செய்யாத நிலை உள்ளது.

ஒற்றைச் சாளர முறை

பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறை மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

கவுன்சிலிங் தொடங்கி தொடங்கி 10 நாள்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்றுகூட தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

 

சில கல்லூரிகளில் மட்டுமே....

பல முன்னணிக் கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் முழுமையாக நிரம்பியிருப்பதாகவும், இரண்டாம் நிலைக் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் ஒற்றை இலக்கத்திலேயே இடங்கள் நிரம்பியிருப்பதாகவும், மூன்றாம் நிலைக் கல்லூரிகளில் ஒரு இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை எனவும் சென்னை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்து வரும் பி.இ. மோகம்

வேலைவாய்ப்புகள் அரிதாகி வரும் காரணத்தால் பொறியியல் படிப்புகள் மீதான மோகம் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

1.90 லட்சம் மட்டுமே விற்பனை

இது இந்த கல்வியாண்டிலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2.13 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகியிருந்த நிலையில், இம்முறை 1.90 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையாயின.

அதேபோல கடந்த ஆண்டில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

 

மிகவும் குறைந்தது

இந்த ஆண்டில் 1.49 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இதனால் இந்த முறை பொறியியல் படிப்பில் சேர்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

பொதுப் பிரிவு கவுன்சிலிங் தொடங்கி நேற்றுடன் 10 நாள்கள் முடிந்துள்ள நிலையில், 10 ஆயிரத்து 193 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதையே தவிர்த்துவிட்டனர். 168 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.

 

35 ஆயிரம் பேர் சேர்க்கை

அழைக்கப்பட்ட 46 ஆயிரத்து 219 பேரில், 35 ஆயிரத்து 858 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரியில் சேர்வதற்காக சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

சில முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டுமே முழுமையாக இப்போது நிரம்பியுள்ளன. தரவரிசையில் முன்னணியில் உள்ள கல்லூரிகளைப் பார்த்த மாணவ, மாணவிகள் அதைத் தேர்வு செய்துள்ளனர்.

கவுன்சிலிங் முடிய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், இரண்டாம் நிலைக் கல்லூரிகளில் சில இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

ஓர் இடம் தேர்வு செய்யவில்லை

ஆனால் மூன்றாம் நிலையிலுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிலைமை மோசமாகவுள்ளது. இந்த வகைக் கல்லூரிகளில் ஓர் இடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லையாம்.

குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சுயநிதி கல்லூரி ஒன்றில், கலந்தாய்வுக்கு ஒப்படைக்கப்பட்ட 210 மெக்கானிக்கல் இடங்கள், 103 இசிஇ இடங்கள் மட்டுமின்றி மீதமுள்ள படிப்புகளிலும் ஒரு இடத்தைக்கூட இதுவரை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.

இதேபோல சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் கலந்தாய்வுக்கு ஒப்படைக்கப்பட்ட 141 மெக்கானிக்கல் இடங்கள், 105 இசிஇ இடங்கள், 105 சிஎஸ்இ இடங்கள், 52 சிவில் இடங்கள், 52 இஇஇ இடங்கள், 40 ஐடி இடங்கள் தேர்வு செய்யப்படாமல் அப்படியே உள்ளன.

 

50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள்...

இதுபோல, தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓர் இடம் கூட இதுவரை தேர்வு செய்யப்படாதது கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இன்னும் 20 நாள்கள் கவுன்சிலிங் நடைபெற உள்ளதால், பெரும்பாலான கல்லூரிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விடும் என பல்கலைக்கழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,93,116 இடங்களில் இதுவரை 35,858 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 1,57,258 இடங்கள் காலியாக உள்ளன.

 

English summary
Students who applied fo BE courses has avoided some self finance colleges, because the colleges is placed last in the university rank list.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia