கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மாணவருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது முக்கியமானது. மாணவர்களின் எதிர்காலத்திற்கும், மேற்படிப்புக்கும் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கொரோனா நோய் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.
மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உள்ளதால் ஊரடங்கு தடை நீக்கப்பட்ட பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மூன்று மணி நேரம் நடைபெறும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், தேர்வின் போது மாணவர்களுக்கு இடையே போதிய இடைவெளி இருக்கும்.
இதனிடையே, நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.