பள்ளி காலாண்டுத் தேர்வில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக தேர்ச்சிபெற்ற பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அனிதா, அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது 12ம் வகுப்பு காலாண்டுத் தேர்வில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வரும் நவம்பர் 30 ஆம் தேதியன்று இந்த சிறப்புப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், பொருளியல் ஆகிய பாடங்கள் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த சிறப்பு பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் தவறாது பாடப் புத்தகங்களை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.