ஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கு ஒரே கவுன்சலிங் - மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவிப்பு

Posted By: Jayanthi

சென்னை: நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடிகள் இணைந்து பொதுவான கவுன்சலிங் மூலம் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது.

இந்திய தொழில் நுட்ப மையங்கள் (IIT) பொருத்தவரை ஹைதராபாத், புவனேஷ்வர், மும்பை, மாண்டி, டெல்லி, இந்தூர், காந்திநகர், ஜோத்பூர், சென்னை, காரக்பூர், பாட்னா, ரோபார், ரூக்கே, வாரணாசி ஆகிய இடங்களில் ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டு ஒன்றுக்கு 10000 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவற்றில் பி.டெக், எம்.டெக், பி.எச்டி படிப்புகள் உள்ளிட்ட இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர்களை சேர்க்க ஆண்டுதோறும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது(JEE).

அதேபோல நாட்டில் அனைத்து மாநிலத்துக்கும் தலா ஒரு தேசிய தொழில் நுட்ப மையங்கள்(NIT) இயங்கி வருகின்றன. தமிழகத்தில் திருச்சியில் என்ஐடி இயங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள என்ஐடிகளில் மொத்தம் 14555 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். திருச்சி என்ஐடியில் 814 இடங்கள் உள்ளன. இது தவிர புதியதாக தொடங்கப்பட்டுள்ள என்ஐடிகளில் 930 இடங்கள் உள்ளன.

மேற்கண்ட ஐஐடி, என்ஐடிகளில் மாணவர் சேர்க்கைக்காக தனித் தனி தேர்வுக் குழுக்கள் உள்ளன. அவற்றின் மூலம் கவுன்சலிங் நடத்தி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்களை சேர்க்கின்றனர். இதனால் மாணவர்கள் வேறு படிப்புகளில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தனித்தனியாக தேர்வு எழுதுவதும் சிரமமாக உள்ளது. இதையடுத்து ஐஐடியும், என்ஐடியும் இணைந்து ஒரே கவுன்சலிங் மூலம் மாணவர்கள் தேர்வு செய்வது என்று தீர்மானித்துள்ளன. இந்த திட்டத்தின்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தனித் தனி கவுன்சலிங் கிடையாது. ஒரே கவுன்சலிங் மூலம் மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகளை இரண்டு நிறுவனங்களும் இணைந்து செய்கின்றன. இவற்றுடன் சிஎப்டிஐயை சேர்க்கவும் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று வெளியிட்டார்.

English summary
The union govt announced single counselling system for the admission in NIT, IIT nationwide.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia