ஏன் இன்னும் பள்ளிக் கல்வித்துறை.. நீட் தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கல...?

Posted By:

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்களை இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழில் பயிற்சி வகுப்புக்களும், நீட் தேர்விற்கான பாடப்புத்தங்களும் இன்றி அரசு பள்ளி மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

நீட் தேர்வில் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். இல்லையென்றால் அவர்களின் டாக்டர் கனவு பலிக்காமலேயே போய்விடும்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

நீட் தேர்வு

உச்ச நீதிமன்றம் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது. இதில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய சுகாதராத் துறை இன்னும் ஒப்புதல் தரவில்லை.

பள்ளிகல்விதுறை மெத்தனம்

தமிழக மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என சென்னைக்கு வந்திருந்த மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் பள்ளிக்கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் நீட் தேர்வில் மெத்தனமாகவே இருந்து வருகின்றன.

சுகாதாரத்துறையின் அலட்சியம்

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்திய தமிழக அரசு நீட் தேர்வுக் கட்டாயம் என்பதை மாணவ மாணவியர்களுக்கு உறுதியாக கூறவில்லை. அதே நேரத்தில் நீட் தேர்வுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் பொறுப்பேற்றுள்ள சுகாதராத் துறையும் தமிழக மாணவர்களுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

ஏமாந்த மாணவர்கள்

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சை நம்பி பல மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்காமலேயே இருந்து விட்டனர். பின்னர் உச்சநீதிமன்றம் ஏப்ரல் 1 முதல் 5 நாட்கள் அவகாசம் கொடுத்ததால் மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். ஆனால் விண்ணப்பித்த மாணவர்களுக்கும் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புக்கள். பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

உயர்க்கல்வி கேள்விக்குறி

இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர். வழி காட்டும் மையங்கள் அமைத்த தமிழக அரசு நீட் தேர்வுக்கு வழி காட்டவில்லையே என்ற ஆதங்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அவர்களின் உயர்க்கல்வி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

English summary
School Education Department has not trained the government school students for neet exam. the government school students and Rural students are suffering from training classes.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia