எஸ்பிஐ ஆஷா உதவித்தொகை (SBI Asha Scholarship 2026) திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 4-ஆம் தேதி நள்ளிரவோடு முடிகிறது. எஸ்பிஐ ஃபவுண்டேஷன் (SBI Foundation) சார்பில் திறமையான மாணவர்களுக்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.15 லட்சம் வரை கல்வி உதவித்தொகை கிடைக்கும். 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் வரை அனைவரும் இதன் மூலம் பயனடையலாம். கடைசி நேரத்தில் இணையதள நெரிசலைத் தவிர்க்க, தகுதியுள்ள நபர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பிப்பது நல்லது.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் கடந்த கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் 10 சதவீதத் தளர்வு அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே சமயம், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த வருமான வரம்பு ரூ.6 லட்சம் வரை தளர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இந்த உதவித்தொகையில் 50 சதவீத இடங்கள் மாணவிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

எஸ்பிஐ ஆஷா உதவித்தொகை: தகுதிகளும் நிதியுதவி விவரமும்
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது. நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இளங்கலை (UG) படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரை கிடைக்கும். முதுகலை மாணவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலும், மருத்துவ மாணவர்களுக்கு ரூ.4.5 லட்சம் வரையிலும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள்
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் தேவையான ஆவணங்களைத் தெளிவான நகல்களாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்றிதழ், செல்லுபடியாகும் வருமான சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் சேர்க்கைக்கான சான்று (Admission Proof) ஆகியவை அவசியம். உதவித்தொகை நேரடியாகக் கணக்கில் சேர வங்கி பாஸ்புக் விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவைப்படும். ஆவணங்கள் அரைகுறையாகவோ அல்லது தெளிவற்றதாகவோ இருந்தால் விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று முதலில் பதிவு செய்ய வேண்டும். உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்விப் பிரிவைச் சரியாகத் தேர்வு செய்து நிரப்பவும். கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றிய பின், விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். கடைசி நாளில் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படலாம் என்பதால், முன்கூட்டியே விண்ணப்பிப்பதே சிறந்தது.
தேர்வு செய்யும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
மாணவர்களின் கல்வித் திறமை மற்றும் குடும்ப வருமானத்தின் அடிப்படையிலேயே தகுதியானவர்களைத் தேர்வுக் குழு தேர்வு செய்யும். முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குத் தொலைபேசி வழி சரிபார்ப்பு (Telephonic Verification) நடத்தப்படும். அதன்பின்னரே நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களின் வங்கித் கணக்கிற்கு நேரடியாகவே (DBT) உதவித்தொகை அனுப்பப்படும். தகுதியுள்ள மாணவர்கள் செப்டம்பர் 4-ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் உடனே விண்ணப்பித்து இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications












