கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ரத்தானால் அம்மாணவர் செலுத்திய முழு கட்டணத்தையும் கல்வி நிறுவனமே திரும்ப வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

யுஜிசி நிபந்தனைகளைப் பின்பற்றி செயல்படக்கூடிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது கட்டணம் செலுத்துகின்ற மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில், படிப்புகளில் சேர சென்றால் அவர்கள் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் உடனே திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய உத்தரவுகளை விதித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனம் சார்ந்த படிப்புகள், கல்வி கட்டணம், சேர்க்கை விபரங்கள், நிர்வாகக் குழு, அங்கீகார விபரங்கள் அடங்கிய விபர புத்தகத்தை மாணவர்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான முழு விபரங்களைக் கல்வி நிறுவனம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
மேலும், கல்லூரி நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே புகார்கள் பதிவு செய்யவும் வசதி செய்திருக்க வேண்டும். அவ்வாறு வருகின்ற புகார்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். இந்த நடைமுறை அடுத்த 2019- 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்போது அசல் சான்றிதழ்களுக்கு பதிலாக சுய சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களை வழங்கினாலே போதுமானது. சேர்க்கை நடைபெறும்போது அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் நிர்வாகம் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும்.
ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்ற பின்னர் வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாற முயற்சிக்கும் பட்ட, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை வைத்திருக்கக் கூடாது.
தேர்வுக் கட்டணம் அல்லது ஓராண்டுக்கான கல்வி கட்டணம் மட்டுமே முன்கூட்டியே பெற வேண்டும். ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணத்தையும் முன்கூட்டியே கல்வி நிறுவனங்கள் பெறக்கூடாது.
மாணவர் சேர்க்கை நிறைவு பெறுவதற்கு கடைசி 15 நாட்கள் உள்ள நிலையில், அப்போது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் தருவாயில் அந்த மாணவர் செலுத்திய முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும். செலுத்திய கட்டணத்தில் 5 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ₹5 ஆயிரம் செயல்பாட்டு கட்டணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை நிறைவு பெற 15 நாட்கள் இல்லையெனில் 90 சதவிகிதத் தொயையும், கடைசி தேதி முடிந்து 15 நாட்கள் கடந்துவிட்டால் 80 சதவிகிதமும், 16 முதல் 30 நாட்கள் கடந்துவிட்டால் 50 சதவிகிதமும் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டால் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதே வேளையில் பாதுகாப்பு சார்ந்த டெபாசிட் தொகை செலுத்தியிருந்தால் அதனைத் திரும்ப வழங்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த புதிய விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யுஜியி-யின் மானியம், உயர் கல்வி மானியம் ரத்து செய்யப்படும். சிறப்புத் திட்டங்களுக்கு யுஜிசி உதவி செய்வது நிறுத்தப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பும் விளம்பரங்களாக வெளியிடப்படும். கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக் கழங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.
தனியார் பல்கலைக் கழகங்கள் இந்த யுஜிசி விதிகளைப் பின்பற்றவில்லை எனில் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் யுஜிசி தரப்பில் பரிந்துரை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications












