வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் விவகாரம்: நிர்வாக அலுவலர்கள் போர்க்கொடி

Posted By: Jayanthi

சென்னை: வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் அலுவலகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் கடந்த 18ம் தேதி நடந்த கணக்குத் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளை தேர்வுப் பணியில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் வாட்ஸ் ஆப் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளனர். இத குறித்து தகவல் அறிந்த அந்த கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தனியார் பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர்களோடு தொடர்புடைய கல்வி அலுவலர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேரடியாக சம்பவம் நடந்த ஓசூருக்கு சென்று விசாரணை நடத்தினர். கேள்வித்தாள் வெளியான விஷயத்தில்பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அவசர கூட்டம் நடத்தினர்.

அப்போது அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பால்ராஜ் கூறும்போது, தேர்வுத்துறை விதிகளின் படி தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டில்தான் தேர்வு மையம் இருக்கும். கேள்வித்தாள் அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். தேர்வு அறையில் கேள்வித்தாள் கட்டு பிரிக்கும் முன்பு மாணவர்களிட் காட்டித்தான் பிரிக்க வேண்டும். பின்னர் மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். மீதம் உள்ள கேள்வித்தாள் அனைத்தும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தான் இருக்கும். அப்படி இருக்கும் போது கல்வித்துறை நிர்வாகப் பணியாளர்களை தேர்வுத்துறை பணி நீக்கம் செய்துள்ளது. இது கண்டிக்கத் தக்கது. அதனால் அந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி இன்று ஒசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

கல்வித்துறையின் நிர்வாக அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் மேலும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கல்வி அலுவலர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த பிரச்னை மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

English summary
Administration staffs from Education department announced their protest against action on co staffs in question paper leak issue.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia