கல்விக் கடன்... பெற்றோர்களை அலைக்கழிக்கும் அரசு வங்கிகள்!!!

Posted By:

இன்றைய சூழலில் பெரும்பாலனான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களின் படிப்பு கல்விக் கடனை மட்டுமே சார்ந்திருக்கிறது.

எப்பாடுபட்டாவது +2 வரை படிக்க வைக்கும் பெற்றோர்கள், தனது குழந்தைகளின் அடுத்த கட்ட படிப்பிற்கு மிகவும் எதிர்பார்த்திருப்பது வங்கிகள் வழங்கும் கல்விக் கடன்களையே.

கல்விக் கடன்... பெற்றோர்களை அலைக்கழிக்கும் அரசு வங்கிகள்!!!

ஒரு காலத்தில் நூற்றில் ஒருவருக்கு மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த கல்விக் கடன், ப.சிதம்பரம் அவர்கள் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் அனைவருக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்தார்.

மற்ற கடன்களைப் போல, எந்த வங்கியில் வேண்டுமானாலும் கல்விக் கடனைப் பெற இயலாது. ஒரு தாலூக்காவில் இருக்கும் ஒவ்வொரு வார்டிற்கும் ஒரு குறிப்பிட்ட வங்கியில் மட்டுமே கல்விக் கடன்களைப் பெற முடியும். அரசு வங்கியில் இருந்து தனியார் வங்கிகள் வரை வார்டு வாரியாக கல்விக் கடனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய நிலமையில் அரசு கல்லூரி அல்லாத ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியற் படிப்பை முடித்து வெளியில் வருவதற்கு குறைந்த பட்சம் மூணே முக்கால் லட்சத்திலிருது நாலரை லட்சம் வரை செல்வாகிறது. இந்தக் கணக்கு கல்லூரிகளால் கொடுக்கப்படும் "Fee structure" இல் காண்பிக்கபடுவதே.

பொறியியற் கலந்தாய்வைப் பொறுத்தவரை முதல் இரண்டு நாட்களிலேயே அனைத்து அரசு கல்லூரிகளிலும் சீட்டுக்கள் முடிந்துவிடுகின்றன.

அதற்கு அடுத்த பதினைந்து இருபது நாட்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருமே தமிழ்நாட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு தனியார் பொறியியற் கல்லூரியில் மட்டுமே படித்தாக வேண்டிய கட்டாயம். கடந்த இரண்டாண்டுகளில் மாவட்டம் தோறும் பல அரசு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அவை இன்னும் ஒரு முழுமையான பொறியியற் கல்லூரிக்குண்டான வசதிகளுடன் தயாராக இல்லை.

கல்விக் கடன்... பெற்றோர்களை அலைக்கழிக்கும் அரசு வங்கிகள்!!!

முதல் ஆண்டு படிப்பிற்கு பெரும்பாலும் எந்த வங்கியும் கடன் அளிப்பதில்லை. அவர்கள் கேட்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவே நம்மால் கல்லூரியில் சேர்ந்தால் தான் முடியும். முதலாம் ஆண்டு கல்லூரியில் சேரவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஒரு லட்ச ரூபாய், கட்டியாகவேண்டும். குழந்தைகளின் படிப்பிற்காக அதை எப்பாடுபட்டாவது யார் கையில் காலில் விழுந்தோ, அல்லது தங்களிடம் இருக்கும் எதாவது நிலம், நகைகளை விற்றோ சேர்த்து விடுகின்றனர். மற்ற மூன்று வருட படிப்பும் அவர்களுக்கு கல்விக் கடனை நம்பியே இருக்கிறது.

ஆனால் தற்போது சில அரசு வங்கிகளில் இதுபோல கல்விக் கடன் கேட்டுச்செல்லும் பெற்றோரை மிகவும் கீழ்த்தரமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். இது சரியில்லை, அது சரியில்லை என்று முதலில் ஆவணங்களைக் குறை சொல்ல ஆரம்பித்து, ஒரு பத்து இருபது முறை அலைய வைக்கின்றனர். பிறகு ஆவணங்களை சரியாக கொண்டு வந்த பிறகு, இன்று மேனேஜர் இல்லை. இன்னும் இரண்டு நாள் கழித்து வாருங்கள். இந்த வாரம் ஆடிட் இருக்கிறது. பத்து நாள் கழித்து வாருங்கள் என்று எவ்வளவுக்கெவ்வளவு அலைய விட முடியுமோ அவ்வளவு அலைய விடுகின்றனர்.

சென்ற ஆண்டு பொறியியல் சேர்ந்த மாணவர்களுக்கு ஓராண்டு நிறைவு பெற்று, ஜூன் கடைசி வாரத்தில் இரண்டாமாண்டிற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இரண்டாமாண்டிற்கு செல்லும் மாணவர்கள், ஹாஸ்டல் மற்றும் கல்விக்கட்டணம் என சுமார் 90000 ரூபாயைக் (தொன்னுறாயிரம்.. கிட்டத்தட்ட ஒரு லட்சம்!) கட்டினால்தான் வகுப்பிற்கே செல்ல முடியும். அதற்காக பெரும்பாலான
பெற்றோர்கள் கல்விக் கடன்களையே ஜூன் மாதத்திற்குள் பெற
வங்கியிலேயே தவம் கிடக்கின்றனர்.

ஆனால் பேரவூரணியில் உள்ள பாரத ஸ்டேட் பாங்கில் இதுவரை இந்த ஆண்டுக்கான ஒரு கல்விக் கடன் கூட அனுமதிக்கப்படவில்லையாம்.

ச்சும்மா பேருக்கு பதினைந்து விண்ணப்பங்களை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு, அதற்கு மேல் வருகிறவர்களை ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கின்றார்களாம்.

கடந்த நான்கு மாதங்களாக மகனின் கல்விக் கடனுக்காக அலையும் ஒரு தாயிடம் கேட்ட பொழுது, "இதுவரைக்கும் 50 தடவைக்கு மேல வந்துட்டோம் சார். முதல்ல
வரும்போது அந்த டாக்குமெண்ட் சரி இல்லை இது சரியில்லைன்னு அனுப்புனாங்க. அப்புறம் எல்லாத்தையும் கொண்டு வந்தப்புறம், மேனேஜருக்கு உடம்பு சரி இல்லை, ஃபீல்டு ஆபீசர் லீவுல இருக்காரு, ஆடிட் நடக்குதுன்னு ஒவ்வொரு தடவையும் ஒரு காரணத்தைச் சொல்லி அனுப்பிடுறாங்க. அதுவும் இப்ப முறையா பதில் கூட சொல்ல  மாட்டேங்குறாங்க. எது கேட்டாலும் சிடு சிடுன்னு எரிஞ்சி விழறாங்க. 'வாங்குறவங்க யாருமே குடுக்க மாட்டேங்குறீங்க.. அப்புறம் எதுக்கு உங்களுக்கு லோன் குடுக்கனும்னு சொல்றாங்க. நாங்க உங்களுக்கு லோன் தரனும்னு கட்டாயமெல்லாம் ஒண்ணும் இல்லை. நா என்ன சொல்லி வேணாலும் உங்க லோனை ரிஜெக்ட் பண்ணலாம்'னு சொல்றாங்க சார். நாலு மாசமா அலைஞ்சும் இன்னும் என்கிட்ட லோன் அப்ளிகேஷன கூட வாங்கிக்கலை சார்," என்கிறார்.

ஏற்கனவே வாங்கியவர்கள் கடனைக் கட்டவில்லையென்றால் அதை வசூலிப்பதற்கான வழிமுறைகளையும், சட்டப்பூர்வ நடவடிக்கைக்களையும் எடுக்காமல், அடுத்தவருக்கு லோன் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம்? வெல்லம் தின்பது ஒருவர் விரல் சூப்புவது ஒருவரா? யாரோ செய்த தவறுக்கு யார் பாதிக்கப்படுவது.

இதே போன்ற நிலமை தொடர்ந்தால் பல மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடக் கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம். காரணம், இன்றைக்கு கல்லூரிப் படிப்புகள் அவ்வளவு காஸ்ட்லி.

மத்திய, தமிழக அரசுகள் ஒரு சரியான வழியைக் காட்டுமா? வங்கிகளை நெறிப்படுத்துமா?

-முத்துசிவா

English summary
Nowadays Public sector Banks are never sanctioning educational loans to college students on time.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia