சென்னை :இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர விரும்புபவர்கள் இணையதளத்தில் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மழலையர் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஏழை எளிய மாணவருக்கான 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது அந்த பள்ளியில் சேரும் வகுப்பில் ஏழை எளியவர்கள், நலிவடைந்தவர்கள், மறுக்கப்பட்டவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் ஆகியோர் 25 சதவீதம் இலவசமாக சேர்க்கப்படுவார்கள்.
இலவச சேர்க்கை
2017-2018-ம் கல்வியாண்டிற்கு மாநிலம் முழுவதும் உள்ள 9 ஆயிரம் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) உள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்களுக்கு நலிவடைந்தவர்கள் மறுக்கப்பட்டவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் ஆகியோர் 25 சதவீதம் இலவசமாக சேர்க்கப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்பம்
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவையான வசதிகள்
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அவர்களது கைபேசி எண்ணிற்கு அனைத்து தகவல்களும் குறுஞ் செய்தியாக அனுப்பி வைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவித் தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன.
குலுக்கல் முறை
தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களை விண்ணப்பிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்யப்படும். அந்தந்த பள்ளியில் குறிப்பிட்ட நாளில் குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கைக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறையினர் முன்னிலையில் குலுக்கல் வெளிப்படையாக நடத்தப்படும்.
முன்னுரிமை
மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் முறை கிடையாது. அவர்களுக்கு முதலிலேயே முன்னுரிமை கொடுக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்படும்.
பொன்னான வாய்ப்பு
ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 18-ந்தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் இந்த பொன்னான வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












