வயசு 17 தான்: ஆனால் இந்த மாணவியின் சாதனைகளோ ஏராளம், ஏராளம்

Posted By:

நியூயார்க்: அமெரிக்காவில் படித்து வரும் இந்திய வம்சாவளி மாணவி பூஜா சந்திரசேகருக்கு அங்குள்ள பிரபலமான 14 பல்கலைக்கழகங்களிலும் இடம் கிடைத்துள்ளது. ஐவி லீக் எனப்படும் 8 பிரபல கல்லூரிகளிலும் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

வெர்ஜினியா மாநிலத்தில் வசித்து வரும் 17 வயதான பூஜா பேசும் முறையை வைத்து ஒருவருக்கு பார்கின்சன் எனப்படும் மறதி நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார். என்ஜினியர்களான பூஜாவின் பெற்றோர் பெங்களூரில் இருந்து சென்று அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர்.

வயசு 17 தான்: ஆனால் இந்த மாணவியின் சாதனைகளோ ஏராளம், ஏராளம்

இது குறித்து அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

உங்களை சாதிக்கத் தூண்டியது எது?

என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை என்னை சாதிக்கத் தூண்டியது. நான் துவங்கிய என்ஜிஓவுக்காக நான் பார்கின்சன் நோய் மற்றும் மூளை காயம் தொடர்பாக ஆய்வு செய்தேன். சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களையே ஏற்று செய்து வருகிறேன்.

எந்த பல்கலைக்கழகத்தில் சேர உள்ளீர்கள்?

அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இறுதி முடிவு எடுக்க மே 1ம் தேதி வரை காலஅவகாசம் உள்ளது. ஹார்வர்டு அல்லது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேரலாம் என்று இருக்கிறேன். அந்த பல்கலைக்கழகங்களுக்கு சென்று மாணவர்களுடன் பேசி அங்கு உள்ள சூழல் பற்றி தெரிந்து கொள்ள உள்ளேன். என் ஆய்வை தொடர்ந்து செய்வேன். கல்லூரி செய்தித்தாள் அல்லது நூலக பத்திரிக்கையில் எழுதுவேன் என்று நம்புகிறேன்.

எவ்வளவு நேரம் படிக்க ஒதுக்குவீர்கள்? படிப்பை தவிர உங்களுக்கு எதில் எல்லாம் ஆர்வம் உள்ளது?

பொதுவாக நான் மாலையில் 3 மணிநேரம் ஒதுக்கி வீட்டுப்பாடம் செய்வேன், படிப்பேன். படிப்பு தவிர எனது என்ஜிஓவான ப்ராஜெக்ட்சிஎஸ்கேர்ள்ஸ் தான் எனக்கு பிடித்தது. அது தவிர எழுத, டென்னிஸ் விளையாட, இசை கேட்க பிடிக்கும். எனக்கு பாலிவுட் படங்கள் பிடிக்கும்.

ப்ராஜெக்ட்சிஎஸ்கேர்ள்ஸ் போன்ற பெரிய திட்டத்தை துவங்க என்ன காரணம்?

என்னுடைய உயர் நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் வகுப்பில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே இருந்த தொழில்நுட்ப கேப்பால் அதாவது இடைவெளியால் ப்ராஜெக்ட்சிஎஸ்கேர்ள்ஸ் திட்டத்தை துவங்கினேன். கம்ப்யூட்டர் சயன்ஸ் வகுப்புக்குள் நான் முதல் நாள் நுழைந்தபோது அங்கு என்னையும் சேர்த்து மொத்தம் 3 மாணவிகள் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதையடுத்து தான் பள்ளி மாணவிகள் இடையே கம்ப்யூட்டர் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று தோன்றியது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை சிறுமிகளுக்கு தெரிவிக்கவே அந்த திட்டத்தை துவங்கியதாக கூறினீர்கள். அது எந்த அளவுக்கு சாத்தியமாகி உள்ளது?

ப்ராஜெக்ட்சிஎஸ்கேர்ள்ஸ் திட்டம் மூலம் தேசிய அளவில் கம்ப்யூட்டர் சயன்ஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் நடுநிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை அளித்துள்ளனர். எங்கள் குழுவில் தற்போது சுமார் 50 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் உள்ளனர். அவர்கள் தங்களின் பகுதியில் கம்ப்யூட்டர் குறித்த முகாம்களை நடத்தி வருகிறார்கள். ப்ராஜெக்ட்சிஎஸ்கேர்ள்ஸ் திட்டத்தின் வெற்றியால் நான் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டேன். மேலும் சிலிகான் வேலியில் உள்ள பெரிய ஆட்கள் முன்பு என் ப்ராஜெக்ட்சிஎஸ்கேர்ள்ஸ் திட்டம் குறித்து விரிவுரை வழங்க வேண்டும் என்று அழைத்தார்கள்.

இந்த இளம் வயதில் பல விஷயங்களை செய்வது கடினமாக இல்லையா?

வீட்டுப்பாடம், பிற வேலைகள், ஆய்வு ஆகியவற்றை சமாளிக்க சில நேரம் கடினமாக இருக்கும். ஆனால் இதை எல்லாம் செய்ய முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும் என்று எனக்கு நானே தெரிவித்துக் கொள்வேன். எதை செய்தாலும் விரும்பிச் செய்தால் அது கடினமாகத் தெரியாது.

பார்கின்சன் நோயை கண்டறிய நீங்கள் கண்டுபிடித்துள்ள மொபைல் அப்ளிகேஷன் பற்றி சொல்லுங்களேன்?

அந்த அப்ளிகேஷனில் யாராவது 10 முதல் 15 வினாடிகள் பேசினால் அவர்களின் குரலை வைத்து அவர்களுக்கு பார்கின்சன் நோய் உள்ளதாக என்பதை கண்டறிய முடியும். அந்த அப்ளிகேஷன் பார்கின்சன் நோயை 96 சதவீதம் துல்லியமாக கண்டுபிடிக்கும்.

லேசான மூளை காயத்தை கண்டறியும் அப்ளிகேஷன், சக்கரை நோயை கட்டுப்படுத்துவது குறித்த அப்ளிகேஷன் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளேன்.

இந்த அப்ளிகேஷன்களை எங்கிருந்து டவுன்லோட் செய்ய முடியும்?

இந்த அப்ளிகேஷன்கள் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. அடுத்த ஆண்டு வரும் என்று நம்புகிறோம்.

இந்த அப்ளிகேஷன்களை மேம்படுத்த உங்களுக்கு நேரம் உள்ளதா?

கண்டிப்பாக நேரம் உள்ளது. கல்லூரியில் தொழில்முனைவோர் குறித்து படித்தேன் என்றால் எனது அப்ளிகேஷன்களை மேம்படுத்த நிறைய நேரம் கிடைக்கும்.

சவாலான சம்பவம் ஏதாவது உள்ளதா?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ப்ராஜெக்ட்சிஎஸ்கேர்ள்ஸ் திட்டத்தை துவங்கியபோது அது சவாலாக இருந்தது. பள்ளியில் படித்துக் கொண்டு அனுபவம் இல்லாமல் என்ஜிஓ துவங்கி, இணையதளத்தை டிசைன் செய்ததில் இருந்து அனைத்தையும் நானே செய்தேன். நான் கஷ்டப்பட்டு செய்தாலும் தற்போது அது நல்ல பலனை அளித்துள்ளது.

உங்களின் எதிர்கால திட்டங்கள் என்ன?

இளங்கலை படித்துமுடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படிக்க விரும்புகிறேன். மருத்துவராகி மருத்துவ துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவத்தில் புதியவற்றை கண்டுபிடிக்க வேண்டும். தொழில் துவங்குவதில் ஆர்வம் இருப்பதால் எம்.டி. அல்லது எம்.பி.ஏ. படிப்பேன். கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியில் என் ஆய்வை தொடர்வேன். மேலும் எனக்கு பிடித்த ஆங்கிலம் மற்றும் எழுத்துப் பணியையும் தொடர்வேன் என்றார் பூஜா.

English summary
Indian-origin girl Pooja Chandrasekhar who has got offers from all 8 ivy league schools has talked openly about her achievements and future plans with Oneindia.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia