மாதிரி கையேட்டை பின்பற்றியதால் பரிதாபம் - செண்டம் போய்விடும் என்று கவலை

Posted By: Jayanthi

சென்னை, மார்ச் 28: பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாதிரி கையேட்டை பின்பற்றியதான தான் முக்கிய பாடத் தேர்வு கேள்விகளில் திணறியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி மார்ச் 31ல் முடிகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் பதற்றம் இன்றி படித்து தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள தேர்வு அட்டவணையில் இடையிடையே விடுமுறைகள் வந்தன. இதையடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதி வருகின்றனர். தற்போது தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளுக்கு முக்கியமாக கருதப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

மாதிரி கையேட்டை பின்பற்றியதால் பரிதாபம் - செண்டம் போய்விடும் என்று கவலை

கடந்த 18ம் தேதி கணக்கு தேர்வு நடந்தது. 23ம் தேதி வேதியியல் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நடந்தன. 27ம் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. கணக்குத் தேர்வில் சில குளறுபடிகள் இருந்தன. வேதியியல் தேர்வில் 10 கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தின. நேற்று நடந்த இயற்பியல் தேர்வில் 3 கேள்விகள் மட்டும் மாணவர்களை குழப்பின.

இந்த ஆண்டு தேர்வில் இடம் பெறும் கேள்விகளில் 3 மற்றும் 5 மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகள் மாணவர்களின் சிந்தனை திறனை வெளிப்படுத்தும் வகையில் கேட்கப்படும் என்று ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியும் இருந்தது.

ஆனால் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை நடத்தும் ஆசிரியர்களோ அல்லது பள்ளித் தலைமை ஆசிரியர்களோ இந்த விவரத்தை மாணவர்களுக்கு சொல்லவில்லை. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட மாதிரி வினாவிடை புத்தகத்தை அடிப்படையாக வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். இதன் விளைவாக தேர்வில் டுவிஸ்ட் செய்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்களால் பதில் அளிக்க முடியா நிலை ஏற்பட்டது.

சராசரியாக படிக்கும் மாணவர்கள் இது போன்ற கேள்விகளை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. நன்றாக படிக்கும் மாணவர்கள் பெரும் திணறலுடன் இந்த கேள்விகளுக்கு விடை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் முக்கிய பாடங்களில் செண்டம் எடுப்போர் குறித்து இப்போதைக்கு கணிக்க முடியாது என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த இயற்பியல் தேர்விலும் 3,5,10 ம் எண் கேள்விகள் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இடம் பெற்றிருந்தது. மற்ற கேள்விகள் பெரும்பாலும் எளிதாக இருந்தாலும் இந்த 3 கேள்விகள் மட்டும் மாணவர்களை மிரட்டியுள்ளது.

ஆனால் சில மாணவர்கள் இயற்பியல் தேர்வு ஒன்றும் கடினம் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட மாதிரி கையேடுதான் என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

English summary
Most of the plus two students alleged that education department's model guide is the main reason for their poor show in exams.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia