ப்ளஸ் டூ தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன... மே முதல் வாரமே ரிசல்ட்!

Posted By: Jayanthi

சென்னை: பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டம்.

பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 6256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதி வருகின்றனர். இவர்கள் தவிர 43 ஆயிரம் தனித் தேர்வகளும் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்காக தமிழகத்தில் 2577 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வு நாளையுடன் முடிகிறது. இதுவரை நடந்த தேர்வுகளில் எந்தஆண்டும் இல்லாத வரையில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

ப்ளஸ் டூ தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன... மே முதல் வாரமே ரிசல்ட்!

குறிப்பாக தமிழ் முதல் தாள் தேர்வில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் சில மாணவர்கள் தேர்வு அறையில் பிட் அடித்தபோது சிக்கியுள்ளனர். இது தொடர் கதையாகி இதுவரை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிட் அடித்ததாக சிக்கியுள்ளனர்.

இது தவிர 18ம் தேதி நடந்த கணக்கு தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளை தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பியதை அடுத்து 4 தனியார் பள்ளி ஆசிரியர்கள், 4 கல்வி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பறக்கும் படையினர் சோதனை செய்யும் போது மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு அறையின் கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு அணிந்துகூட வரக்கூடாது என்று கண்காணிப்பாளர்கள் கெடுபிடிகள் காட்டத் தொடங்கினர். இது மாணவர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுத்துறையின் இந்த உத்தரவுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி கண்டனம் தெரிவித்தனர். மேலும், 23ம் தேதி நடந்த வேதியியல் பாடத் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் 10 கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தியதால் மாணவர்கள் விடை எழுத திணறினர். 27ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக அமைந்தது. இதுவும் மாணவர்களை குழப்பம் அடையச் செய்துள்ளது.

தவிரவும் பொருளியல், வணிகவியல் தேர்வுகளிலும் கடினமான கேள்விகள் இடம் பெற்றதால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் செண்டம் எடுப்பது குறையும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வளவு பிரச்னைகளை கடந்து வந்த பிளஸ் 2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 20ம் தேதிக்குள் திருத்தி முடித்து மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

English summary
The month long plus two public exams are comes to an end Tomorrow and results will be announced on the first week of may.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia