தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் ஹேக்கத்தான் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில், Pariksha Pe Charcha 2020 போன்ற போட்டியில் கலந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் என பிரதமர் பெருமைகொண்டார்.

Pariksha Pe Charcha 2020
மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கி, அவர்களுக்குப் பயனுள்ள குறிப்புகளை வழங்கும் வகையில் பிரதமர் மோடி ஆண்டுதோறும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) டெல்லி தல்கத்தோரா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
இந்நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி நடத்தி நாடு முழுவதிலும் இருந்து 1,050 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர் என மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

மோடி உரை
Pariksha Pe Charcha 2020 நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், உங்களுடைய இதயத்தைத் தொட்ட நிகழ்ச்சி எதுவென யாரேனும் கேட்டாள் இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சியைத் தான் சொல்வேன் என தெரிவித்தார். மேலும், ஹேக்கத்தான் போன்ற போட்டிகளில் கலந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதில், இளைஞர்களின் உண்மையான திறமை தெரியவரும்.

வாய்ப்பு கொடுத்த மாணவர்கள்
மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில் கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இளம் வயதினர் எனக்கு கொடுத்துள்ளனர். இந்தத் தருணத்தை மிகவும் பெருமையாக எண்ணுகிறேன்.

சந்திராயன் 2
சந்திராயன் 2 திட்டத்தை எடுத்துக்கொண்டால், அதன் தோல்வியால் நானும் கவலை அடைந்தேன். ஆனால், பின்னர் விஞ்ஞானிகளுடன் சென்று பேசி, அவர்களை ஊக்கப்படுத்தினேன். தோல்விகளிலிருந்து நாம் வெற்றிக்கான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்
இன்றைய நவீன யுகத்தை அனைவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். நீங்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். ஆனால், தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் என்றார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், பிரதமரின் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.