கேள்வித்தாள் வெளியான விவகாரம்: சட்டப் பேரவையில் கிளப்ப எதிர்க் கட்சிகள் திட்டம்

Posted By: Jayanthi

சென்னை: பிளஸ் 2 தேர்வு கணக்கு கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் வெளியான பிரச்னையை தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் நேரடியாக சென்று விசாரித்து 4 பேரை சஸ்பெண்டு செய்துள்ளார். இந்த பிரச்னையை சட்டப் பேரவையில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கேள்வித்தாள் வெளியான விவகாரம்: சட்டப் பேரவையில் கிளப்ப எதிர்க் கட்சிகள் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பிளஸ் 2 கணக்கு கேள்வித்தாள் கடந்த 18ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் அதே பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் அனுப்பியுள்ளனர். இது குறித்து கல்வித்துறை சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அதே பள்ளியை சேர்ந்த மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது பெரும் பிரச்னையாக வெடித்தது.

இதையடுத்து தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் நேற்று நேரடியாக கிருஷ்ணகிரிக்கு சென்று 6 தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

அது குறித்து அவர் கூறுகையில், கணக்கு தேர்வின் போது கணக்கு கேள்வித்தாளை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்வு முடிந்தபிறகு தேர்வுத்துறை சார்பில் நாங்களும் அவர்களிடம் விசாரணை நடத்துவோம். இதற்காக குழு அமைக்கப்படும். தற்போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்த ஆசிரியர்கள் யார், அதிகாரிகள் யார் என்பது குறித்தும் விசாரிப்போம். அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தினால்தான் முழுமையான விஷயங்கள் வெளியில் வரும்.

கேள்வித்தாள் வெளியானதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படலாம். ஆனால் இந்த விஷயத்தில் சரியான உத்தரவு இல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டது விசாரிக்கப்பட உள்ளது. மேலும் இதில் ஆள்மாறாட்டம் ஏதாவது நடந்துள்ளா என்றும் பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ், கிருஷ்ணகிரி டிஇஓ அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், அரசுப் பள்ளி ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக இளநிலை உதவியாளர் ரமணா ஆகியோரை சஸ்பெண்டு செய்துள்ளேன் என்றார்.

சட்டப் பேரவை நாளை கூட உள்ள இந்த நேரத்தில் கேள்வித்தாள் வாட்ஸ் ஆப் மூலம் வெளியான பிரச்னையை சட்டப் பேரவையில் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்னை சட்டப் பேரவையில் பெரும் சர்ச்சையை உருவாக்கும்.

English summary
All the opposition party leaders have planned to raise the question on question paper leak issue in assembly today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia