தமிழகத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. அதன்படி 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் விருப்பப் பாடமாக தேர்வு செய்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், மேல்நிலை வகுப்புகளில் 600 மதிப்பெண்களுக்கு பதிலாக இனி 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் எனவும் கூறப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தத் தகவலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், வரும் கல்வியாண்டில் 11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கம்போல் ஆறு பாடங்கள் இருக்கும். பாடங்களைக் குறைப்பது குறித்து எந்த விதமான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்படவில்லை.
தேர்தல் நேரம் என்பதால் இதுபோன்ற தவறான தகவல் பரப்பப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். எனவே, மாணவர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. மேலும், பத்தாம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள்கள் என தற்போதுள்ள நிலையே தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications












