5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ததில் அரசியல் தலையீடு இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் திறன், ஆளுமைத் திறன், நற்பண்பு, அறிவாற்றல் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய குறுந்தகடு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 10 கணினிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமையான வகையில் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் எந்தப் போட்டித் தேர்வையும் எளிதாகச் சந்திக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்கப்படுவர்.
மேலும், மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியல் தலையீடு இல்லை என தெரிவித்தார்.