பிளஸ்-1 படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்... அடுத்த ஆண்டில் அறிமுகமாகிறது!

Posted By:

சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான பாடத் திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2016-17-ம் கல்வியாண்டில் இந்தப் பாடத் திட்டம் அமலாகும் என்று கூறப்படுகிறது.

பிளஸ்-1 படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்... அடுத்த ஆண்டில் அறிமுகமாகிறது!

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தத் துணைக் குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கம் செய்தது.

மேலும் இந்தப் பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே ஒப்புதலை வழங்கிவிட்டது.

அதன் பிறகு, பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்கள் அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டன. ஆனால், பல மாதங்களாக இந்தப் பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வரப் போவதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதற்கான ஒப்புதல் விரைவில் பெறப்பட இருப்பதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது.

இதற்கான அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், அடுத்தக் கல்வியாண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமலாகும் வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. புதிய பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
New Syllabus for plus one classes will be introduced from next academic year, School education department sources said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia