ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் கட்டாயப் பணி.. ஆசிரியர்களின் வயிற்றில் புளி கரைக்கும் அதிரடி அரசு உத்தரவு!

Posted By:

சென்னை: இனி ஒரே பள்ளியில் 3 கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது பள்ளி கல்வித்துறை.

பலருக்கு விலக்கு

ஆசிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்துள்ளது இந்த அறிவிப்பு.

ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் கட்டாயப் பணி.. ஆசிரியர்களின் வயிற்றில் புளி கரைக்கும் அதிரடி அரசு உத்தரவு!

அதே நேரத்தில் பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடமாறுதல் கவுன்சிலிங்

தமிழகம் முழுதும் பணியாற்றும் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பிப்பது நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இதற்காக தனி கவுன்சிலிங் நடத்தி அவர்களுக்குத் தேவையான இடங்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கும் முறையை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. இதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை பின்பற்றி வருகிறது.

புதிய நடைமுறைகள், விதிகள்

இந்த நிலையில் ஒரே பள்ளியில் 3 ஆண்டு பணிபுரிந்திருந்தால் மட்டுமே ஆசிரியர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை பள்ளிக் கல்வித்துறை விதித்திருப்பதற்கு ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான டிரான்ஸ்பர் கவுன்சிலிங் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இப்போது பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.

முக்கிய அம்சங்கள்

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி நிரவல்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்படும். அதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

தற்காலிக நிறுத்தம்

இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

விதிகளில் வந்தது மாற்றம்

அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

ஆண்கள் பள்ளிகளிலிருந்து பெண்கள் பள்ளிக்கு...

ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களையும் நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது. இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எப்போது கவுன்சிலிங் நடக்கும்?

இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங்கை முதலில் நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவலுக்குப் பிறகே கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்டில் நிறைவடையும்

இந்தப் பணிகள் நிறைவடைய ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கவுன்சிலிங் அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் விரைவில் வெளியிடுவர். பல்வேறு புதிய விதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

English summary
A lot of new rules has been implemented in Teacher`s transfers counselling, School education department secretary sabitha said in a press release.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia