அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் இன்று முதல் (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளன. இதனிடையே, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனைத் தவிர்த்து சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி, பெருந்துறை ஐஆர்டி கல்லூரிகளையும் அரசு ஏற்று நடத்துகிறது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு
இக்கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 3,350 இடங்கள் உள்ளன. அவற்றுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் மீதம் இருந்த இடங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே, முதலாமாண்டு வகுப்புகள் வியாழக்கிழமை (இன்று) தொடங்கியுள்ளன.

புதிய கட்டுப்பாடுகள்
மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும், ஆடைக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவு பின்வருமாறு:

ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட்
தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டில், ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்-லெஸ் மேலாடைகள், லெகிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி இல்லை. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும்.

செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது
மாணவர்கள் பேன்ட், சட்டை அணிந்தும், காலில் ஷூ அணிந்தும் வர வேண்டும். மாணவ, மாணவிகள் வகுப்பறையின் உள்ளே செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.

ராகிங்கை தடுக்க வேண்டும்
மேலும், கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டம்
நிகழாண்டு முதல் எம்பிபிஎஸ் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய பாடத் திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற உள்ளன.

60 மணி நேரம்
கடந்த காலங்களில் இரண்டாம் ஆண்டிலிருந்துதான் மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் இருந்தன. தற்போது நடப்பு கல்வியாண்டின் புதிய பாடத்திட்டத்தில், முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பிலேயே 60 மணி நேரம் நோயாளிகளை மாணவர்கள் நேரடியாகச் சந்தித்து சிகிச்சை முறைகளைக் கற்பதற்கான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.