பள்ளி கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி செல்ல காத்திருக்கும் மாணவச் செல்வங்களே உங்களுக்கான தொகுப்பு தான் இது. அதாவது, கடந்த காலங்களில் இருந்ததைப் போல மீசைய முருக்கி விட்டுட்டு, டிசைன் டிசைன் ஆடையெல்லாம் இனி ஸ்கூலுக்கு போட்டுட்டு போக முடியாது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தற்போது பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிதாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாங்க அது என்னன்னு பாக்கலாம்.
அதிகரித்த விடுமுறை நாட்கள்
தமிழகத்தில் பள்ளி பருவத் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறை மற்றும் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் ஜூன் 3ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மாணவர்களுக்கு சீருடை, புத்தகம் உள்ளிட்ட வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
திடீர் கட்டுப்பாடுகள்
இந்த ஆண்டு பள்ளி திறக்கப்பட உள்ள ஓரிரு நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சில கட்டுப்பாடுகளை மாணவர்களுக்கு விதித்துள்ளது. இது வழக்கமான கட்டுப்பாடுகள் என்றில்லாமல் கொஞ்சம் கடுமையானதாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
காலத்திற்கு ஏற்ற கட்டுப்பாடுகள்
முன்பெல்லாம் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்காது. தலை முடியை படிய வாரியிருக்க வேண்டும், ஒட்ட வெட்டியிருக்க வேண்டும். பட்டனை முழுசாக போட்டிருக்க வேண்டும். இவ்வளவுதான் இருக்கும். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. அதற்கு ஏற்றவாறே கட்டுப்பாடுகளும் கூட இப்போது மாறி விட்டன.
இந்த ஆண்டு கொஞ்சம் புதுசு
அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கும் தமிழக பள்ளிக்கல்வித் துறை சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. இதுதொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களைப் பார்க்கலாம்.
நேரத்திற்கு வரலன்னா அவ்வளவுதான்
காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும்.
டிக் டாக்
இருசக்கர மோட்டார் வாகனங்கள், செல்போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
லோ ஹிப், டைட் பேண்ட்
முன்பெல்லாம் மாணவர்கள் என்னதான் பள்ளி சீருடை அணிந்திருந்தாலும் அதனை ஒருவித டிசைனாகவே வடிவமைத்து அணிந்திருப்பர். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக லோ ஹிப், டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும், அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் கட்டிங், முறுக்கு மீசை
மாணவர்களின் தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும். போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.
கைகளில் வளையமா?
கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும். டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது. கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.
சார், பிறந்த நாள் சார்..!
நம் மாணவர்கள், ஏன் நாமே கூட பள்ளியில் தனியாக கெத்தாக தெரியும் அந்த ஒரு நாள் நம் பிறந்த நாளாகத்தான் இருக்கும். அனைவரும் சீருடை அணிந்து வர, நாம் மட்டும் கலர் உடையில் சென்று செம ரகலை செய்திருப்போம். ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாகவே "பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்" என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












