புதிய தேசியக் கல்விக் கொள்கையின் படி, 5ம் வகுப்பு வரையில் பயிலும் குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியக் கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்தியில் ஆளுகின்ற அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை நீக்குவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், முறையான அறிவிப்புகள் ஏதுமின்றி நேற்று (ஜூலை 30) அவசர அவசரமாக புதிய கல்விக் கொள்ளைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கூறுகையில், 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதது. இந்த கல்விக் கொள்கையில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனர்.
தொடர்ந்து, உயர் கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலம் 3-வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும். புத்தகம் மட்டுமின்றி செய்முறை மற்றும் விளையாட்டுகளின் வாயிலாகவும் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும் என்றார்.
மேலும், புதிய தேசியக் கல்விக் கொள்கையில் 5ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமித் கரே குறிப்பிட்டுள்ளார்.