தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது...!

Posted By:

சென்னை : மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு தமிழகத்தில் 57 மையங்களில் நடைபெற்றது. 85 ஆயிரம் பேர் தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வினை எழுதினார்கள். இதுவரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2017-18ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காகன தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டும் நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும என்று உத்தரவிட்டது. இதனால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் நீட் தேர்வு

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900 க்கும் அதிகமான மையங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 57 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதியில்லை

சென்னையில் பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 13 மையங்களில் தேர்வு நடந்தது. தமிழகத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பலர் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை. சுமார் 85 ஆயிரம் பேர் நீட் தேர்வினை எழுதினர். காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மாணவ மாணவிகள் தேர்வு எழுத மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.

தீவிர சோதனை

தீவிர சோதனைக்குப் பின்னரே மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வுக்கான விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுத வருபவர்கள் கைக்கடிகாரம், பெல்ட், கம்மல், மூக்குத்தி, கொலுசு போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. முழுக்கை சட்டை அணிந்து வரவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்த மாணவர்கள் அவற்றை கழற்றி கைப்பகுதியை கத்திரிக்கோலால் வெட்டி, அரைக்கை சட்டையாக மாற்றி அணிந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.

85 சதவீதம் இட ஒதுக்கீடு

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள 85 சதவீதம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அரசு நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான முடிவு ஜூன் மாதம் 8ந் தேதி வெளியிடப்படும். நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 65 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களும் 25 ஆயிரம் பிடிஎஸ் இடங்களும் உள்ளன.

English summary
The NEET examination for student enrollment was held at 57 centers in Tamil Nadu. Only 85 thousand people wrote in the exam.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia