கொரோனா தொற்று காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு, மாணவர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்துத் தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தற்போது நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் என்றும், தற்போதைக்கு இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தரப்பு தொடர்ந்து தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது. நாளை ஜேஇஇ தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தில்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த மனு ஏற்கப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.