நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு 22ம் தேதி இணையதளத்தில் வெளியீடு.. சிபிஎஸ்இ

Posted By:

சென்னை : நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் அதற்கான ஹால் டிக்கெட்டை ஏப்ரல் 22ம் தேதி முதல் இணையதளம் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது.

நீட் தேர்வு

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. மார்ச் 1-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் விண்ணப்பிப்பது முடிவடைந்தது. தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

ஹால் டிக்கெட்

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் (அனுமதி சீட்டு) ஏப்ரல் 15-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.வயது உச்சவரம்பை நீக்கிய உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர். கடந்த 5-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்தது. இதனால் நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இணையதளம்

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 22-ம் தேதி cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. விண்ணப்பதரார்கள் ஹால் டிக்கெட்டினை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நீட் ஒதுக்கீடு

நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

நீட் தேர்வு விபரங்கள்

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடுமுழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

English summary
NEET 2017 (National Eligibility cum Entrance Test) is a national level medical entrance test regulated by the CBSE Board, download hall ticket at cbseneet.nic.in as soon as possible.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia