சிறு வயதில் அட்டகாசம் சிறுமியாக இருந்தவர் இன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சமூகப் பொறுப்புமிக்க ஆசிரியையாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் கதையை பெண் ஒருவர் 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து அந்தப் பதிவானது தற்போது 1,24,000 பார்வைகளை (வியூவ்ஸ்) கடந்து வைரலாகி விட்டது. ஏராளமான நெட்டிசன்கள் அந்தப் பதிவுக்கும், சிறுமிக்கும் லைக் போட்டு பாராட்டி வருகின்றனர்.
ரேவ்ஸ் என்ற பெண் ஒருவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் முன்னாள் மாணவியான அலிஷா குறித்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது வகுப்பில் அன்றிருந்த படுசுட்டியான சிறுமிகளில் ஒருவர் அலிஷா. அவள் எப்போதும் அட்டகாசம் செய்வாள். அவளின் தொந்தரவுக்கு எல்லையே இருக்காது. எவ்வளவு சேட்டை என்றால், தன்னை அடிக்கடி தொந்தரவு செய்த வகுப்புச் சிறுவனின் முன்பற்களை உடைத்துவிட்டாள். அலிஷா ஒரு அடங்காப்பிடாரி என்றே இன்னொரு ஆசிரியை என்னிடம் எச்சரிக்கை செய்தார்.
எனக்கே அலிஷா 'பாஸ்' மாதிரிதான் இருப்பாள். எதற்கும் பயப்படமாட்டாள். நான் நினைத்ததைச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் அதிகாரம் மிக்கவள். மிகவும் புத்திசாலி ஆனால் துளியளவும் பொறுமை அற்றவள்.
இவள் எப்போதாவது ஒழுக்கமாக மாறுவாளா, படிப்பில் நாட்டம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெறுவாளா, பள்ளி படிப்பை முடித்துவிடுவாளா, வாழ்க்கையில் எப்படியாவது பிழைத்துக் கொள்வாளா என்று ஒரு ஆசிரியராக நான் கவலைப்படாத நாளே கிடையாது என்று சொல்லலாம்.பின்னொரு நாள் தன்னை மிகவும் கவர்ந்த ஆசிரியர் என்ற தலைப்பில் என்னை பற்றி அவள் எழுதியிருந்த கட்டுரையைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகும் என்னுடன் தொடர்பில் இருந்தாள்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் கல்லூரியில் சேர்ந்தாள். அது மிகவும் இக்கட்டான காலகட்டம் என்பதால் மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். இருப்பினும் வெற்றிகரமாகப் பட்டப்படிப்பை முடித்து இந்த 2024-ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புகழ்வாய்ந்த பள்ளி ஒன்றில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். எதற்கு ஆசிரியர் பணி, அதுவும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியைத் தேர்ந்தெடுத்தாய் என கேட்டேன். நீங்கள் என் மீது கொண்டிருந்த நம்பிக்கைதான் காரணம் என்றாள்.
அவள் மீது எனக்கு பொறாமையாக உள்ளது. பொறுமையை இழந்து சுற்றிக் கொண்டிருந்தவள். இன்று மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஆசிரியை என்றால் நம்ப முடியவில்லை. அவளின் பணி தொடர வாழ்த்துக்கள இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில் சிறுமியாக இருந்தபோது தன்னுடன் எடுத்துக் கொண்ட படத்தையும், தற்போது இருக்கும் படத்தையும் ரேவ்ஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவுதான் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications












