முடிந்தது பி.இ. கவுன்சிலிங்... இன்னும் ஒரு லட்சம் இடங்கள் காலி!!

Posted By:

சென்னை: சென்னையில் நடைபெற்று வந்த பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 91 ஆயிரம் அரசு இடங்களே காலியாக இருக்கும் நிலை உள்ளது.

அண்ணா பல்கலை..

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கவுன்சிலிங் மையத்தில் இதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

ஜூன் 28-ல் தொடக்கம்

2015-16 கல்வியாண்டு கவுன்சிலிங் கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 29-ல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டது.

பொதுப் பிரிவு

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க 1,48,794 பேர் அழைக்கப்பட்டனர்.

1 லட்சம் பேருக்கு சீட்

இவர்களில் 1,01,620 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இதில் 62,970 பேர் மாணவர்கள், 38,650 பேர் மாணவிகள்.

46 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை

அழைக்கப்பட்டவர்களில் 46,571 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டனர். 603 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

91 ஆயிரம் இடங்கள் காலி

அதே நேரத்தில் சுமார் 91 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. அரசு என்ஜினீயரி்ங் கல்லூரிகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்களாகும் இவை. இவை அனைத்துமே அரசு ஒதுக்கீட்டின் கீழே கொடுக்கப்பட்ட இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுசு குறைந்தது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அதிக மவுசு இருந்தது. என்ஜினீயரிங் படித்தாலே போதும். நல்ல வேலை கிடைத்துவிடும் என்று அறியப்பட்டு வந்தது. ஆனால் உலகப் பொருளாதார அளவில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக என்ஜீனியரிங் படிப்புகளுக்கு தற்போது மவுசு குறைந்துள்ளது.
அதனால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

 

 

காத்து வாங்கும் கல்லூரிகள்...

சில கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பாத நிலை உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை, தரவரிசையில் பின்தங்கிய நிலை போன்றவற்றால் இந்தக் கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை என்றார் அவர்.

English summary
More than 91 Thousand BE, B.Tech Seats are vacant in Engineering College Counselling which is conducting by Chennai Anna university. More than 1 lakh students has got admission letters from the counselling centre.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia