நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் பல்கலைக் கழகங்களிலேயே போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிகளுக்கே செல்லாத மாணவர்கள், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்ததாகப் போலி சான்றிதழ்களை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக் கழகங்களிலிருந்தே அத்தகைய போலி சான்றிதழ்களைப் பெற்று, மாணவர்களுக்கு சில இடைத்தரகர்கள் விற்பனை செய்வதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.
இப்புகாரினை அடிப்படையாகக் கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சில பல்கலைக்கழகங்களில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை செய்வதற்கு உயர்நிலைக் குழு அமைக்குமாறு யுஜிசிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்த விசாரணை அறிக்கையை 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்யும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இடைத்தரகர்களை அடையாளம் கண்டு அவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












