அண்ணாமலைப் பல்கலை.யில் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்: முதல் நாளில் 130 சீட்கள் நிரம்பின!

Posted By:

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, எம்பிபிஎஸ். படிப்புக்கான கவுன்சிலிங்கில் முதல் நாளிலேயே 130 இடங்கள் நிரம்பிவிட்டன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு பயில மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கினர்.

எம்பிபிஎஸ் இடங்கள் 150:

கடந்த மாதம் இங்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் பயில விண்ணப்ப விற்பனைத் தொடங்கியது. 2015-16 ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். (மருத்துவம்) படிப்புக்கு 5,940 விண்ணப்பங்களும், பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புக்கு 1,438 விண்ணப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இங்கு 150 எம்பிபிஎஸ் இடங்களும், 80 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.

முதல் நாள் கவுன்சிலிங்:

இந்த நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங், பல்கலைக்கழகத்தின் சாஸ்திரி இரங்கில் நேற்று நடைபெற்றது. முதல் நாள்க கவுன்சிலிங்குக்கு மொத்தம் 930 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் 14 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 7 மாற்றுத் திறனாளிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். அந்த 7 பேரும் மாற்றுத் திறனாளிக்கான மருத்துவ சோதனையில் உரிய தகுதியில்லாததால் நிராகரிக்கப்பட்டனர்.

குடியாத்தம் சிவரஞ்சனிக்கு முதலிடம்:

கலந்தாய்வில் பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்று எம்பிபிஎஸ் படிப்புக்கு சேர அனுமதிக் கடிதத்தைப் பெற்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த எஸ்.விஜயசிவரஞ்சனி என்ற மாணவி, முதலிடம் பிடித்து அனுமதி சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றார். இவர் பிளஸ் 2-வில் பெற்ற மதிப்பெண்கள் 1,171. கட்-ஆஃப் மதிப்பெண்கள் 197.00.

திருவண்ணாமலை மாவட்டம் பவித்ரத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.திருப்பாவை. இவர் 2-வதாக அனுமதிக் கடிதம் பெற்றார் இவரது பிளஸ் 2 மதிப்பெண்கள் 1161. கட்-ஆஃப் மதிப்பெண் 197.00.

மூன்றாவதாக தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மாணவர் ஆர்.ஏ. சபரீஷ் அனுமதிக் கடிதத்தைப் பெற்றார். இவரது பிளஸ் 2 மதிப்பெண்கள் 1154. கட்-ஆஃப் மதிப்பெண்கள் 197.00.

 

துணைவேந்தர் வழங்கினார்:

எம்பிபிஎஸ் படிக்க முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கான அனுமதிச் சேர்க்கை ஆணையை பல்கலை. துணைவேந்தர் செ.மணியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், சிண்டிகேட் உறுப்பினர் கானூர் பாலசுந்தரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.என்.பிரசாத், பல் மருத்துவப்புல முதல்வர் மைதிலி, கலந்தாய்வு ஆலோசகர் டி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கல்விக் கட்டணம் ரூ.5.54 லட்சம்:

கலந்தாய்வில் ஆணையைப் பெற்றவர்கள் ஜூலை 3ஆம் தேதிக்குள் கல்விக் கட்டணத்தை செலுத்தி அனுமதிச் சேர்க்கை செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பிபிஎஸ் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.5,54,370.

இதைத் தொடர்ந்து மேலும் 2 நாட்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

English summary
MBBS, BDS counselling has started in Annamalai University, Chidambaram yesterday. In the First day 130 MBBS seats has been filled up by the University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia